வெள்ளி, 20 மார்ச், 2009

அன்னை மாதவிக்காக

புரட்சி துறவியொருவன்
படைத்திட்ட பாவையடி !
மிரட்சி நீங்காமல்
பார்வைகள் நிற்குதடி !

கற்புக்கரசி கண்ணகியென
கத்துக்குட்டிகள் பிதற்றுதடி !
கண்ணகி கற்புள்ளவள்தான்
கற்புக்கரசி நீதானடி !

உயர்குலத்தில் பிறந்துவளர்ந்து
உயிர்கற்பு காத்த்தில் !
வியப்பொன்றும் இல்லை
விந்தையொன்றும் இல்லை !

பரத்தையர்குலத்தில் பிறந்துவளர்ந்து
பத்தினியாய் நீபோராடியதில்தான்
இருக்கிறது சிறப்பு !
இதற்கில்லை மறுப்பு !

உடல்விற்கும் சந்தைதனில்
உள்ளம்விற்ற மங்கைநீ !
கவலைகள் பலவிருந்தும்
கலைகள்கற்ற கங்கைநீ !

கண்ணகி கற்புடையவள்தான்
காதலுற்ற பெண்ணில்லை !
கணவனை வழிபட்டவள்தான்
அவன்மீது விழியிடவில்லை !

எரித்தாள் கொற்றவனை
ஏற்றமிகு மதுரையுடன் !
தடம்தவறி சென்றவனை
தடுக்கவில்லை காதலுடன் !

மனையில் காட்டாவீரம்
மதுரையில் காட்டியென்னபயன் !
உரியவனுக்கு காட்டாகாதல்
ஊருக்கு காட்டியென்னபயன் !

மன்னித்துவிடு அன்னையே
மாண்பில்லை உன்னவனுக்கு !
இருவிடத்தும் உள்ளகாதல்
தெரியவில்லை தென்னவனுக்கு !

மணிமேகலையை பெற்றதனால்
மனம்கமழும் உன்பொற்பை !
போராடிப் பெற்றதனால்
பார்புகழும் உன்கற்பை !

இல்லறம் துறந்து
பூண்டாய் காவி !
தர்மத்தால் உலகை
ஆண்டாய் தேவி !
- அன்புடன் ஜகதீஸ்வரன்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!