வெள்ளி, 20 மார்ச், 2009

தலைப்பில்லா கவிதைகள்

காதல் பொங்கிவழியும் இந்தக் கவிதைகளை தலைப்பின் மூலம் சிறை வைக்க மனமில்லை.தலைப்பில்லாமல் சிறகசைக்கும் கவிதைகளை சுகந்திரக் கவிதைகளாக உணருகின்றேன்.வெறும் காதல் மட்டுமே இதன் கரு.

ஊரே வாயாடியென
அழைக்கும் என்னை
ஊமையாக மாற்றுவது
நீ மட்டும்தான்

உன் சேலையுடன் விளையாட
காத்துக் கொண்டிருக்கின்றது காற்று
சொறுகிவைத்திருக்கும் முந்தானையை எடுத்துவிடு
பாவம் எவ்வளவு நேரம்
அது காத்துக் கொண்டிருக்கும்

உன்னைப்பற்றிய சிந்தனையிலேயே
சர்வசதா காலமும்
நான் இருப்பதை
தியானம் என்கின்றனர்
புரியாதவர்கள்.

உன்னுடைய அன்னைக்கு பிறகு
என் காதல்தான் சுமந்துவருகிறது
உன்னை.


நான் பார்ப்பதற்கு
கொடுரமாக இருக்கிறேன்
என்பதற்காக என்னை ஒதுக்கிவிடாதே
கடுமையான சிப்பிக்குள்தான்
மென்மையான முத்திருக்கும்
என்பதை மறந்து விடாதே


உன்னைப் பார்ததிலிருந்து
என்னை மறந்துபோனேன் நான்
யாராவது என்னைப்பற்றி கேட்டால்
எதுவும் தெரியவில்லை எனக்கு
உன்னைப் பற்றி உளறிவிட்டு
நகர்ந்துவிடுகின்றேன்.

என் விழிகளுக்கென்ன
வாஸ்துவா இருக்கின்றது
இடம் பார்த்து உரசிப்போக.

தேவதைகள் வசிக்கும் ஊரில்
பிறந்துவிட்ட பாவச்சிறுவன் நான்
அவர்களிடையே வாழும்போது
கட்டிக்காப்பற்றிய இதயத்தை
உன்னிடம் கொடுத்துவிட்டு
என்னுடைய ஊருக்கு
திரும்பிக் கொண்டிருக்கிறேன்
இதயம் இல்லாதவனாய்.

உன்னுடைய நிர்வாணம்கூட
பாதிக்காது என்னை
ஆனால் இப்பொழுது
உன்கென்டைக்கால் கூட
மோகமூட்டுகின்றது
காதலுக்கும் காமத்திற்கும்
ஒருநூல் அளவே
இடைவெளி என்பது
உனக்கு தெரியாமலா இருக்கும்.

நாத்திகனாக இருந்தவனை
நீ வெள்ளிக் கிழமைகளில்
கோவிலுக்கு செல்கிறாய்
என்ற காரணத்திற்காக
ஆத்திகனாக மாற்றியது
காதல் தான்

நான் காதல் தேவதையால்
கவிதை எழுதுவதற்காக அனுப்பட்டவன்
ஒருவேளை நீங்கள் அனுப்பட்டிருக்கலாம்
காதல் செய்வதற்கு மட்டும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

என் கவிதைகள் படித்ததும் உங்கள் உள்ளம் சொன்னது என்ன? எனக்கும் சொல்லிச் செல்லுங்கள் நண்பர்களே!